
விருதுநகர்,
மாணவர்கள் மத்தியில் சிக்கனத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
உலக சிக்கன நாளையொட்டி சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சு, நடனம் மற்றும் நாடகப் போட்டி நடந்தது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் சிவஞானம் பாராட்டுச் சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது: “இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட ஒவ்வொருவரும் சேமிப்பின் பழக்கத்தினை அவசியம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சிறுக, சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாராத செலவினங்களை ஈடுகட்ட உதவும். பொதுமக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்களது குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழக்கைக்கு பாதுகாப்பும் கிடைத்திடும்.
சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், பெற்றோர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகளிடத்தில் சேமிப்பு பழக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் மத்தியில் சிக்கனத்தின் அவசியம் குறித்த பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. எதிர்காலம் சிறப்பாக அமைய மாணவர்கள் தங்கள் இளமைப்பருவத்திலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) ராஜாமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஒருங்கிணைப்பாளர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.