“அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு…!!!” - புயல் காற்றில் சாலையோரம் சாய்ந்த மரங்கள் வெட்டி விற்பனை

Asianet News Tamil  
Published : Dec 25, 2016, 03:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
“அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு…!!!” - புயல் காற்றில் சாலையோரம் சாய்ந்த மரங்கள் வெட்டி விற்பனை

சுருக்கம்

சென்னை மற்றும் புறநகரில் சாலை ஓரங்களில் கிடக்கும் மரங்களை சமூக விரோதிகள் வெட்டி எடுத்து வாகனங்களில் ஏற்றி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனை தடுத்து ஏலம் விடாமல் உள்ளாட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வர்தா புயலால் சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், அண்ணனூர், மிட்டினமல்லி,  கோவில்பாதாகை, முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர், பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், புழல், செங்குன்றம், பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, கே.கே.நகர், போரூர், ஐயப்பன்தாங்கல் மற்றும் பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் உடைந்து விழுந்தன.

இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வீடுகள், வணிக வளாகம் மீது விழுந்தன. இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து சரிந்தன. மரங்கள் விழுந்ததில் சில கட்டிடங்களில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு இருக்கின்றன. கட்டிடங்கள் மீது விழுந்த மரங்களை உரிமையாளர்களே சொந்த செலவில் பொக்லைன், கிரேன் மூலம் அகற்றியுள்ளனர். அவைகளை பொதுமக்கள் சாலை, தெருக்கள் ஓரங்களில் போட்டு வைத்து உள்ளனர்.

மேலும், புயலால் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் விழுந்ததில் பல நாட்களாக மின்சாரம், குடிநீர், பால், உணவு உள்ளிட்ட இன்றியமையாத தேவைகள் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கியது.
     
குறிப்பாக, புறநகர் பகுதியில் வெட்டிய மரங்கள், கிளைகள், இலை குப்பைகள் ஆகியவற்றை பொதுமக்கள் முக்கிய சாலைகள்,  தெருக்களில் போட்டு வைத்து உள்ளனர். அவைகளை உள்ளாட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தாமல் உள்ளனர். மேலும், சாலை ஓரங்களில் கிடக்கும்  வெட்டிய மரங்களை ஏலம் விடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால்  நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் சாலை, தெருக்களில் காய்ந்து கிடக்கும் மரங்களை சமூக விரோதிகள் வெட்டி எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

புயலால் சரிந்த மரங்களை கடந்த 10நாட்களுக்கு மேலாகியும் அதிகாரிகள் அப்புறப்படுத்தாமல் விட்டு சென்று உள்ளனர். சாலைகள், தெருக்களில் மரக்கிளைகள், இலை குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். புறநகர் பகுதி முழுவதும் தெருக்கள் குப்பை காடாக காட்சி அளிக்கிறது. சமூக விரோதிகள் சரிந்து கிடக்கும்  மரங்களை வெட்டி எடுத்து சென்று வருகின்றனர். 

மேலும், அவர்கள் நல்ல மரங்களையும் வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.  சில இடங்களில் அதிகாரிகளும் மரங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்ய உடந்தையாக உள்ளனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

எனவே, சென்னை புறநகரில் வெட்டிய மரங்களை சமூக விரோதிகள் விற்பனை செய்வதை தடுக்கவும், அதை ஏலம் விடவும் ஏற்பாடு செய்ய உள்ளாட்சி அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்
சிக்கன் விலை உச்சம்.. விஸ்வரூபமெடுத்த கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை.. முக்கிய குழு அமைத்த அரசு!