
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்க தாசில்தார் மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாசிக்கின்றனர். இப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கல்லுடைக்கும் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஏற்பட்ட வர்தா புயலால் ஏராளமான பழமை வாய்ந்த மரங்கள் மக்கள் குடியிருக்கும் வீடுகள் மீது வேறோடு சாய்ந்ததில் கீரப்பாக்கத்தில் உள்ள விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோயில் தெரு, ஊமை மாரியம்மன் கோயில் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, முத்தாலம்மன் கோயில் தெரு, துலுக்காணத்தம்மன் கோயில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் 150 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் தரை மட்டமானது.
மேலும் சிலரது வீட்டுக்குள் ஊற்று தண்ணீர் சுரந்தபடி உள்ளதால் படுக்க கூட இடமில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த 12 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொசுக்கடியில் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே வர்தா புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை தமிழக அரசின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட்டு நிவாரண உதவிகள் கிடைக்கவும், குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடிசைகளை கணக்கெடுக்கும்படி மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் செங்கல்பட்டு கோட்ட கலால் அலுவலர் ஓம்பிரகாஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் கீரப்பாக்கம் ஊராட்சியில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை கடந்த 18ம் தேதி கணக்கெடுத்தனர்.
இதில் 355 வீடுகள் பாதிப்படைந்தது தெரியவந்தது. இதுகுறித்த அறிக்கையினை செங்கல்பட்டு தாசில்தார் பரிமளவதனியிடம் அலுவலர்கள் சமர்ப்பித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை நிவாரண உதவி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை கீரப்பாக்கம் ஊராட்சியில் கொட்டினர். இதனால், எங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு குப்பைகள் கொட்ட கூடாது என கூறினோம்.
ஆனாலும், குப்பைகள் கொட்டுவதை துப்புரவு ஊழியர்கள் நிறுத்தவில்லை. இந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் தேங்கியது. இதனால், நங்கள் பல்வேறு போராட்டம் நடத்தினோம். இதையடுத்து இந்த சம்பவங்கள் கலெக்டர் கவனத்துக்கு சென்றது. பின்ன, இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்தினர்.
கீரப்பாக்கம் ஊராட்சியில் குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தியதால், எங்கள் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல் வர்தா புயலால் வீடுகளை இழந்து தவிக்கின்ற குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தாசில்தார் மறுக்கின்றார்.
எனவே வர்தா புயலால் பாதிக்கப்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியை மத்திய குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டு நிவாரணம் கிடைக்கவும், குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகளை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டதற்கு, மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி எந்த ஒரு அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் வீடு, வீடாக சென்று வீட்டின் உள்ளே புகுந்து ஆய்வு செய்தோம். இதில் 355 வீடுகள் பாதிப்படைந்தது தெரியவந்தது.
இதுபற்றிய அறிக்கையை தாசில்தாரிடம் சமர்ப்பித்தோம். ஆனால் 355 வீடுகளில் குறைத்து 115 வீடுகளாக கணக்கு கொடுக்கும்படி தாசில்தார் கூறுகிறார். நாங்கள் என்ன செய்வது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதற்கு மாவட்ட கலெக்டர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.