லாரி மீது வேன் பயங்கரமாக மோதியதில் 10 பேர் பலத்த காயம்; லாரி ஓட்டுநர் கைது...

First Published Feb 26, 2018, 11:01 AM IST
Highlights
Van brutal hits Lorry 10 injured seriously lorry driver arrested


தேனி

தேனியில் லாரி மீது வேன் பயங்கரமாக மோதியதில் 10 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு வேனில், தேனி அருகே உள்ள குன்னூர் கிராமத்துக்கு தோட்ட வேலைக்கு சென்றனர்.

வேன் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கரிசல்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த இராயவேலூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள் (60), அமுதா (40), நாகம்மாள் (45), பாண்டியம்மாள் (35), பாலக்கோம்பையை சேர்ந்த பார்வதி (55), மாரியம்மாள் (42), சரஸ்வதி (31), ராமுத்தாய் (65), சுப்புலட்சுமி (50) மற்றும் வேன் டிரைவர் மாடசாமி (38) ஆகிய பத்து பேர் பலத்த காயம் அடைந்தனர்.

வேனில் பயணம் செய்த மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பித்தனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஆண்டிப்பட்டி காவலாளர்கள் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநர் திருச்சியை சேர்ந்த கருப்பசாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

click me!