
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யான வைத்தியலிங்கம் அதிமுகவின் பொதுச் செயலாளராக, இளவரசியின் மகன் விவேக் அதிமுக இளைஞர் அணிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வில் பொதுச் செயலாளர் பதவியை, சசிகலாவை ஏற்கும்படி அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி, அந்தத் தீர்மான நகலை ஓ.பி.எஸ். தலைமையில் ஐந்து பேர் சென்று போயஸ் கார்டனில் கொடுத்தார்கள்.
அதையடுத்து, சசிகலாவும் முறையாக அதிமுக தலைமைக் கழகம் சென்று பொதுச்செயலாளர் பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போகும் முன்பு, தனது அக்காள் மகன் தினகரனை துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்தார். தற்போது, தினகரனும் சிறைக்கு சென்றதால் அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் ஆகிய இரண்டு பதவியும் காலியாக உள்ளது.
இந்நிலையில், அதிமுக-வில் பிரிந்துள்ள இரு அணிகளும் இணைவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும்நிலையில், ஓ.பி.எஸ். அணியினர் பொதுச்செயலாளர் பதவியையும், முதல்வர் பதவியையும் ஏற்கனவே கேட்டு டிமான்ட் செய்திருந்தனர்.
ஆனால், தற்போது ஏதாவது ஒரு பதவி கொடுத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
பொதுச்செயலாளர் பதவியை, முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான வைத்தியலிங்கம் கேட்டு வருகிறார். அவருக்கு திவாகர் ஆசியும், சசி ஆசியும் உள்ளதாம்.
இந்த சூப்பர் பிளான் ஒர்க்அவுட் ஆகுமா ? ஓபிஎஸ் அணியினர் ஏற்றுக் கொள்வார்களா?