
தூத்துக்குடி
எந்த ஒரு வழக்கிலும் இலஞ்சம் வாங்கியவர்களைதான் கைது செய்வார்கள். ஆனால், டெல்லி போலீஸ் முதன்முறையாக இலஞ்சம் கொடுத்ததாக தினகரனை திட்டமிட்டே கைது செய்துள்ளது என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் விளாசினார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கைதை கண்டித்து தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், சிவபெருமாள், ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக இளைஞர் அணி ஜெபசிங் வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அதிமுக அம்மா செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக அம்மா செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் பேசியது:
“அதிமுகவை ஜெயலலிதா வழி நடத்திச் செல்ல பெரும் பங்காற்றியவர் சசிகலா. ஆனால் கட்சியிலோ, ஆட்சியிலோ அவர் ஆர்வம் காட்டவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு பல மூத்த நிர்வாகிகள் இணைந்து சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் வர வேண்டும் என்று வற்புறுத்தினர். திடீரென பா.ஜனதாவிடம் அடிபணிந்து சசிகலாவை எதிர்க்கின்றனர்.
இரட்டை இலையை மீட்க இலஞ்சம் கொடுத்ததாக தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த ஒரு வழக்கிலும் இலஞ்சம் வாங்கியவர்களை தான் காவலாளர்கள் கைது செய்வார்கள். ஆனால், டெல்லி காவலாளர்கள் முதன்முறையாக இலஞ்சம் கொடுத்ததாக தினகரனை கைது செய்துள்ளனர். இது திட்டமிட்ட சதி.
கட்சியை ஜெயலலிதா வழியில் நடத்த தகுதி படைத்தவர்கள் சசிகலாவும், தினகரனும்தான். அவர்களை விலக்கி வைத்து விட்டு கட்சியை நடத்த முடியுமா?
அதிமுக இரு அணிகளுக்கு இடையேயும் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று கராராக தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.
இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் வி.பி.ஆர்.சுரேஷ், பெருமாள்சாமி, ராஜமள்ளர் கட்சி நிறுவனர் கார்த்திக், துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், தேவர் மகாசபைச் செயலாளர் அருள்ராஜ், பொருளாளர் மகாராஜா, முக்குலத்தோர் புலிப்படை மாவட்டச் செயலாளர் காசிப்பாண்டி, பசும்பொன் தேவர் கழகம் பொன்பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.