
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வயிறு மற்றும் நெற்றியில் நாமம் போட்டு இரண்டாவது நாளாக தங்களது தொடர் முழக்க போராட்டத்தை தொடர்ந்தனர் போராட்டக்காரர்கள்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று முன்தினம் திரளாக கூடினர்.
அவர்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தங்களது தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கினர்.
இந்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.
இந்த தொடர் முழக்க போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் மகேந்திரன் தொடங்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசியது:
“விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்திட வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
தென்னக நதிகளை இணைக்க மத்திய, மாநில அரசுகள் ஒழுங்காற்றுக் குழு அமைத்திட வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் பிரச்சனைகளை போர்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் வயிறு மற்றும் நெற்றியில் நாமமிட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தளி ராமச்சந்திரன், அகில இந்திய விவசாய சங்க மாநில துணைத் தலைவர் லகுமய்யா, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நரசிம்மன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினர்.