
மதுரை
சோழவந்தான் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பெரும் மழைக்கு, பலன் தரும் நிலையில் இருந்த 3000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததில் விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் முள்ளிப்பள்ளம் ஆகிய இடங்களில் கிணற்று நீர் பாசன மூலம் வாழை, தென்னை, கொய்யா, அகத்திமரம் உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை எதிர்பாராத நேரத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனையடுத்து இடி மின்னலுடன் கூடிய பெரும் மழை பெய்தது. இதில் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான கணேசமூர்த்தி, ஆனந்தன், கனி, முருகன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களில் பலன் தரும் நிலையிலிருந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட முப்பட்டை, ரஸ்தாலி, கற்பூரவள்ளி ஆகிய வாழைகள் வேரோடு சாய்ந்து விழுந்து சேதமாயின.
மேலும், முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த கருப்பாயி, வெங்கடேசன், ஜெகன், நாராயணசாமி ஆகியோருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இருந்த சுமார் 100–க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் முற்றிலும் வேரோடு சாய்ந்து விழுந்தன.
அதுமட்டுமின்றி, மரங்கள் சாய்ந்து, அந்த பகுதியில் இருந்த 7 மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமாயின.
இதேபோல் சோழவந்தான் மற்றும் பேட்டைப் பகுதிகளில் மூன்று மின்கம்பங்கள் சேதமாயின.
முள்ளிப்பள்ளம் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட கொய்யா மரங்கள், விவசாயி கண்ணனுக்கு சொந்தமான 500–க்கும் மேற்பட்ட அகத்தி மரங்களும் சாய்ந்து விழுந்து சேதமாயின. இதனால், விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வேப்ப மரமும், கிராம வருவாய் அலுவலர் அருகே உள்ள புங்கைமரம் சாய்ந்து அலுவலக மேற்கூரை மீது விழுந்தது. நல்ல வேளையாக யாருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை.
சேதமடைந்த பகுதிகளில் வருவாய், வேளாண் துறையினர் நேரில் சென்று சேதமதிப்பை கணக்கிட்டு வருகின்றனர்.
இந்த எதிர்பாராத சூறாவளி காற்று மழையினால் வாடிப்பட்டி சாலைப் பகுதி மற்றும் நகரி சாலைப் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.