
ஆர்கே நகர் இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி, நடைபெற உள்ளது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.கே. நகர் இடை தேர்தல் வெளிப்படையாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.
வாக்காளர்களுக்கு பரிசு, பணம், பொருட்கள் வழங்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதனை தடுப்பதற்கான அனைத்து பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம். அதைமீறி நடந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர்களை மிரட்டுவது, பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது போன்ற செயல்களில் அரசியல் கட்சியினர் ஈடுபடக்கூடாது.
பணம் பட்டுவாடாவை தடுக்க பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் உள்பட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிட்டுள்ளோம். நியாயமாக தேர்தல் நடத்தவும், வெளிப்படை தன்மையுடன் வாக்களிக்கவும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.