கெத்து காட்டும் உதயநிதி.. சவால் விடும் விஜய்.. சீறும் எடப்பாடி.. தேர்தல் திருவிழா அப்டேட்ஸ்!

Published : Apr 02, 2026, 07:00 PM IST
TN Assembly Elections 2026

சுருக்கம்

TN Assembly Elections 2026: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். 

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்து வருகின்றனர். மறுபக்கம் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் என பம்பரமாக சுழன்று வாக்குகள் வேட்டையாடி வருகின்றனர். தமிழக தேர்தல் திருவிழாவில் இன்றைய (ஏப்ரல் 2) நிகழ்வுகளின் தொகுப்பை சுருக்கமாக பார்ப்போம்.

மீண்டும் மெகா வெற்றியை ருசிப்பாரா உதயநிதி?

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதன் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி, 93,285 வாக்குகள் பெற்று மெகா வெற்றியை ருசித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திறந்த ஜீப்பில் சென்ற உதயநிதிக்கு பொதுமக்கள், திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு உதயநிதி வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

விஜய்யால் திக்குமுக்காடிய திருச்சி

தவெக தலைவர் சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பூரில் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்த விஜய், இன்று திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மண்டலக்குழு அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து திறந்த வேனில் நின்றபடியே மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக ஆட்சியை சரமாரியாக விமர்சித்த விஜய், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தவெகவுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தருமபுரியில் இன்று மாலை அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் பெண்கள் இப்போது தான் வேலைக்கு சென்றது போல் ஸ்டாலின் பேசுகிறார். தமிழகத்தில் அதிகமான பெண்கள் எப்போதும் வேலைக்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர். நாங்கள் பாஜகவுக்கு அடிமை இல்லை. எந்த கட்சியும் யாருக்கும் அடிமை இல்லை. ஸ்டாலினின் திமுகவை போல கூஜா தூக்கும் கட்சி அல்ல நாங்கள்'' என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!
தலைவனா இருக்க தகுதியில்லை! ஜெயில் இருந்தபோது யாருப்பா வந்தீங்க.! கொதித்தெழுந்த ஆ.ராசா.!