2 வருடங்களாக வீடுகளில் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த திருட்டு தம்பதி கைது; 195 சவரன் நகைகள் மீட்பு...

 
Published : Jun 27, 2018, 07:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
2 வருடங்களாக வீடுகளில் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த திருட்டு தம்பதி கைது; 195 சவரன் நகைகள் மீட்பு...

சுருக்கம்

Two years robbery lived luxury life theft couple arrested thirunelveli

திருநெல்வேலி

திருநெல்வேலியில் இரண்டு வருடங்களாக பூட்டிக் கிடந்த வீடுகளில் இருந்து நகை, பணம் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த திருட்டு தம்பதியை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 195 சவரன் நகைகளை காவலாளர்கள் மீட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக சுரண்டை, சேர்ந்தமரம், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், சொக்கம்பட்டி, கடையநல்லூர், குற்றாலம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன.

இந்தச் சம்பங்களில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை பிடிக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உத்தரவின்பேரில் புளியங்குடி காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்தத் தனிப்படையில் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆண்டனி, நிஷாந்த், போலீசார் ஜோஸ், விஜய், கிருஷ்ணவேணி, ராஜேந்திரன், வடிவேல் முருகன், வசந்தகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். 

வீடுகளில் கொள்ளையடித்து வரும் கும்பலை தனிப்படை காவலாளர்கள் தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் சொக்கம்பட்டியில் உள்ள ஒரு கடை முன்பு நின்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் இளைஞர் ஒருவர் அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தார். 

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு சென்றனர். அதனைக் கண்ட அந்த இளைஞர் அங்கிருந்டு தப்பியோடிவிட்டார். 

பின்னர் இதுகுறித்து தனிப்படை காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட இளைஞர் குறித்து தனிப்படை காவலாளர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அருகில் உள்ள கள்ளம்புளியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரவி கார்த்திக் (33) என்பது தெரிந்தது. 

மேலும், அவர் தற்போது புளியங்குடி டி.என்.புதுக்குடியில் வசித்து வருகிறார் என்பதும், இவர் ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி, சிறை சென்றுள்ளதும் தெரிய வந்தது.

அதன்பின்னர், நேற்று டி.என்.புதுக்குடியில் உள்ள அவருடைய வீட்டைச் சுற்றி வளைத்த தனிப்படை காவலாளர்கள் வீட்டில் இருந்த ரவி கார்த்திக் மற்றும் அவருடைய மனைவி பிரியங்கா (25) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் ரவி கார்த்திக்க்கிடம் காவலாளர்கள் விசாரணை நடத்திவிட்டு அவர் கூறியதாக காவலாளர்கள் கூறியது. 

"பல்வேறு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நான் கடந்த 2016–ஆம் ஆண்டு வெளியே வந்தேன். 2017–ஆம் ஆண்டு முதல் பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தேன். அந்த ஆண்டு தென்காசி சொர்ணபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் 10 சவரன் நகைகளையும், கே.ஆர்.காலனியில் உள்ள வீட்டில் 80 சவரன் நகைகளையும், வி.கே.புதூரில் உள்ள மூன்று  வீடுகளில் 32 சவரன் நகைகளும், ரூ.11 இலட்சத்தையும் கொள்ளையடித்தேன்.

அதே ஆண்டு ஜூன் மாதம் குற்றாலத்தில் ஒரு வீடு புகுந்து வெள்ளி பொருட்களையும், சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் தெருவிலுள்ள வீட்டில் 276 கிராம் நகைகளையும், நவம்பர் மாதத்தில் அச்சன்புதூரில் ஒரு வீட்டில் ரூ.35 ஆயிரம், நெடுவயலில் வீடு புகுந்து 17 கிராம் நகையையும் திருடினேன்.

டிசம்பர் மாதத்தில் கடையநல்லூரில் வீடு புகுந்து 32 சவரன் நகைகள், ரூ.7 ஆயிரம் திருடினேன். கடந்த ஜனவரி மாதத்தில் வாசுதேவநல்லூரிலும், பிப்ரவரி மாதத்தில் சுரண்டை, சிவகுருநாதபுரத்திலும், மார்ச் மாதத்தில் வாசுதேவநல்லூரிலும் வீடுகளில் நகைகள், பணத்தை கொள்ளையடித்தேன். 

மே மாதத்தில் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் ஒரு வீட்டில் 64 கிராம் நகைகள், ரூ.16 ஆயிரத்தை திருடினேன். இந்த வகையில் 194½ சவரன் நகைகள் மற்றும் பல இலட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளேன். கொள்ளையடுத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தோம்" என்று தெரிவித்ததாக காவலாளர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ரவி கார்த்திக்கையும் கொள்ளை சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி பிரியங்காவையும் தனிப்படை காவலாளர்கள் கைது செய்தனர். 

இந்த தம்பதியர் நேற்று தென்காசி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!