
செங்கம்,
செங்கம் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மீது மண் சரிந்து விழுந்து உயிரிழந்தனர். அவர்களை மீட்க வந்தவர் மீது கல் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சொர்ப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த இராமசாமி மகன் வெங்கட்ராமன். இவருக்கு ஊரின் எல்லையோரம் மாரியம்மன் கோவில் அருகே விவசாய நிலம் இருக்கிறது. நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்வது பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு கிணற்றை ஆழப்படுத்தும் பணித் தொடங்கியது. இதில் சொர்ப்பனந்தல் காலனியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை, கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடைப்பெற்றது. மதியம் 3 மணியளவில் கிணற்றில் கீழ்பகுதியில் இருந்த பாறைகள் தோட்டாக்கள் வைத்து தகர்க்கப்பட்டது.
தோட்டாக்கள் வெடித்தபோது கிணற்றுக்குள் சிதறிக்கிடந்த பாறைகள், மண்ணை அள்ளி மேலே அனுப்புவதற்காக 1 மணி நேரத்திற்கு பின்னால் சொர்ப்பனந்தல் காலனியைச் சேர்ந்த தேவராஜ் (50), கண்ணன் (52) ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கினார்கள். சிதறிய பாறைகள் மற்றும் மண்ணை அள்ளி அவர்கள் மேலே அனுப்பி கொண்டிருந்தார்கள்.
அப்போது திடீரென கிணற்றின் பக்கவாட்டில் இருந்த மண் சரிந்ததில் கிணற்றின் அடிப்பகுதியில் நின்று வேலை செய்து கொண்டிருந்த தேவராஜ், கண்ணன் ஆகியோரின் மீது மண் மூடியது.
இதனைக் கண்ட ஏழுமலை கிணற்றில் இறங்கி அவர்களை மீட்க முயன்றார். அப்போது அவரின் தலைமீது பக்கவாட்டில் இருந்து கல் ஒன்று விழுந்தது. இதில் அவர் பலத்த காயத்துடன் துடிதுடித்தார்.
இதுகுறித்து காவலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மேல்செங்கம் காவல் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் பாய்ச்சல் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் காவலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேவராஜ், கண்ணன் ஆகியோர் மீது மூடியிருந்த மண்ணை அகற்றினார்கள். ஆனால், அவர்கள் இருவரும் அங்கேயே மூச்சுத்திணறி இறந்து கிடந்தனர்.
இருவரின் உடலையும் காவலாளர்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்களை மீட்க இறங்கி தலையில் கல் விழுந்து படுகாயமடைந்த ஏழுமலைக்கு 10 தையல்கள் போடப்பட்டது. அவருக்குத் தொடர்ந்து செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பாய்ச்சல் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றை ஆழப்படுத்தும்போது மண் சரிந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சொர்ப்பனந்தல் காலனி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.