காவல் காத்த நாயை திருடிய இருவர் கைது; அழகாக இருந்ததால் திருடினோம் என்று வாக்குமூலம்…

First Published Jul 28, 2017, 8:44 AM IST
Highlights
Two persons arrested for stealing a dog


தேனி

அழகாக இருந்ததால் வளர்க்க ஆசைப்பட்டு, காவல் காத்த நாயை திருடிய இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். நாயை நீதிமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும் அதனை புகைப்படம் எடுத்து வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சின்னபொட்டிபுரத்தைச் சேர்ந்தவர் நல்லகாமு. இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனது கிராமத்திலேயே ஆட்டுக்கிடை ஒன்றை அமைத்துள்ளார். அதற்கு காவலாக, ராஜபாளையம் வகையைச் சேர்ந்த ஒரு நாயையும் அவர் வளர்த்தார். அதனை ஆட்டுக்கிடை அருகே சங்கிலியால் கட்டி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அந்த வழியாக இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஆட்டுக்கிடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர்கள், தாங்கள் வைத்திருந்த பிஸ்கட்டை நாய்க்கு போட்டு சங்கிலியோடு அந்த நாயை அவிழ்த்து கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்டனர்.

அப்போது எதிரே வந்த நல்லகாமு, தனது நாயை மோட்டார் சைக்கிளில் திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் திருடன், திருடன் என்று சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை அக்கம்பக்கத்தினர் விரட்டி பிடித்தனர். நாயையும் மீட்டனர். பிடிபட்ட இருவரையும் போடி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் உதவி ஆய்வாளர் கோதண்டராமன் விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையில் அவர்கள், “தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (21), பாலசுப்பிரமணியன் (23) என்று தெரியவந்தது. மேலும், பார்ப்பதற்கு அழகாக இருப்பதாகவும், விலை உயர்ந்த அந்த நாயை தாங்கள் வளர்க்க திட்டமிட்டோம். அதனால் தான் திருடினோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைதான இருவரும் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவர்களை 15 நாள்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு அசோக்குமார் உத்தரவிட்டார்.

மேலும் திருடப்பட்ட நாயை நீதிமன்றத்திற்கு கொண்டுவர அவர் உத்தரவு பிறப்பித்தார். உதவி ஆய்வாளர் கோதண்டராமன், அந்த நாயை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து மாஜிஸ்திரேட்டிடம் காட்டினார். பின்னர் அந்த நாயை புகைப்படம் எடுத்து வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் புகைப்படம் எடுக்கப்பட்டது என்பது கொசுறு தகவல்.

tags
click me!