
சிவகங்கை
தேவகோட்டையில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். தலைமறைவான ஆறு பேரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருணகிரிப்பட்டினம் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து அருகில் உள்ள கோவில் ஊருணிக்கு கொண்டுச் சென்றனர்.
இந்த விழாவின்போது பத்து பேர்கள் கொண்ட மர்ம கும்பல் தங்களது கையில் வீச்சு அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களோடு அங்கு வந்தனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் மற்றும் அடியார்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து மர்ம கும்பலை சேர்ந்த இருவர் கையில் இருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களை ஒரு மறைவான இடத்தில் மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
மேலும், இந்த கோவிலில் ஏற்கனவே சாமி கும்பிடுவதில் இரு பிரிவினரிடையே தகராறு இருந்து வந்தது. இதில் ஒரு பிரிவினர் தங்களை தான் அந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வந்தனர் என்று குற்றம் சாட்டி கோவில் அருகே உள்ள போஸ் என்பவரின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் போஸ் என்பவரின் வீட்டில் மறைந்துள்ளதாக புகார் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை காவலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவலாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்பட காவலாளர்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பின் இரண்டு மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் சார்பில் ஜெகதீஸ்வரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டையைச் சேர்ந்த பாபு, விக்கி, சதீஷ், ராமநாதன், சங்கர், தினேஷ்பாபு, சிவசங்கர பாண்டியன், காசிவிஸ்வநாதன் ஆகிய எட்டு பேர் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்து சங்கர் மற்றும் காசிவிஸ்வநாதன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற அறுவரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.