
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக களத்தில் வேட்பாளர்களும் அவர்கள் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பதால் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு பிரச்சாரம் செய்த வேட்பாளர்களில் 10க்கும் மேற்பட்டோர் திடீர் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அனைவர் மனதையும் உலுக்கியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் போட்டியிடும் இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று மட்டுமே இரண்டு திமுக வேட்பாளர்கள் மாரடைப்பால் விட்டனர்.
இன்று காலையில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் இரண்டாவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சித்துரெட்டி என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதேபோல தஞ்சை மாவட்டத்திலும் மேலும் ஒரு திமுக வேட்பாளர் காலமாகியுள்ளார். அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதே பகுதியின் நேரு நகரைச் சேர்ந்த அனுசியா திமுக சார்பில் போட்டியிட இருந்தார்.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். பிரச்சாரத்திற்கு இன்றே கடைசி நாள் என்பதால் அனுசியா இன்று காலையிலிருந்தே தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தார். அவ்வாறு பிரச்சாரம் செய்யும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவமனை கொண்டுசென்றும் பயனில்லை. அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதை அடுத்து வேட்பாளர்கள் உயிரிழந்த இரு இடங்களிலும் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது. அடுத்தடுத்து இரண்டு திமுக வேட்பாளர்கள் உயிரிழந்தது கட்சி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.