நியூட்ரினோவுக்கு 'நோ'.. மத்திய அரசுக்கு செக்..தமிழக அரசின் அடுத்த தாக்கு..

Published : Feb 17, 2022, 02:36 PM IST
நியூட்ரினோவுக்கு 'நோ'.. மத்திய அரசுக்கு செக்..தமிழக அரசின் அடுத்த தாக்கு..

சுருக்கம்

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பே முக்கியம் என்றும் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  

நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு இத்திட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.தமிழக அரசு தெரிவித்ததாவது, திட்ட அமைவிடம் மதிகெட்டான் – பெரியார் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளதால் TIFRக்கு இத்திட்டற்கான காட்டுயிர் வாரிய அனுமதி வழங்க முடியாது என மாவட்ட வனத்துறை அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.

இத்திட்ட அமைவிடமானது உலக அளவில் உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள போடி மேற்கு மலையாகும். இந்த போடி மேற்கு மலையானது புலிகள் வசிக்கக் கூடிய மேகமலை திருவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக விளங்குகிறது. இந்த இணைப்புப் பகுதி புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதற்கும் அவைகளின் இனப்பெருக்க பரவலுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த மலையில் மிகச்சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் கூட புலிகளின் நடமாட்டம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இந்த மலைப்பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும்.மேலும் இந்த மலை பகுதியானது வைகை அணைக்கு நீர் தருகின்ற பெரியாறு நதியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது.

திட்டத்திற்காக அமைக்கப்படும் குகையானது மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்திற்கு பூமிக்கடியில் அமைக்கப்பட்டாலும் கூட அக்குகை அமைப்பதற்கான சுரங்கம் அமைக்கும் பணி வெடிபொருள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்லும் போக்குவரத்து, பெரிய பெரிய இயந்திரங்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயினங்களின் நடமாட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.மக்களின் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த ஆண்டு பிரதமர் மோடியிடம் திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கொண்ட குழு கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து இத்திட்டத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.மேற்கண்ட காரணங்களை தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 22ம் தேதி நடைபெறவுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!