
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் கூற்றுக்கு தமிழக வெற்றி கழகம் பதில் அளித்துள்ளது. தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தற்போதைய அச்சமான சூழ்நிலையில் மக்கள் பயத்துடன் நெஞ்சில் அடித்துக் கொள்வது அவருக்குக் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களைத் திறந்தாலே பாலியல் வன்கொடுமை செய்திகளும், பிஞ்சு குழந்தைகளின் மரண ஓலங்களும் தான் கேட்கின்றன. இதுதான் பாதுகாப்பான மாநிலமா?
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.குறிப்பாக, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் 4000 ஐ தாண்டுகிறது. முறையான கட்டமைப்புடன்கூடிய போக்சோ நீதிமன்றங்கள் இல்லாதது. காவல் நிலையங்களில் போக்சோ வழக்குகளுக்கென சட்ட உதவித் தன்னார்வலர்கள் உதவ முடியாத சூழல் போன்றவை குற்றவாளிகளின் தண்டனையை தாமதப்படுத்துகின்றன. திமுக அரசின் இந்த மெத்தனப் போக்கு குற்றவாளிகளுக்குத் தைரியத்தைக் கொடுப்பதுடன், குற்றங்கள் அதிகரிக்கவும் காரணமாகின்றன.
இதையெல்லாம் கண்காணித்து சரி செய்யாமல் மேடைக்கு மேடை விளம்பரம் மட்டுமே செய்வதை திமுக அரசு வாடிக்கையாக செய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இனியாவது தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து உண்மையான தமிழ்நாட்டைச் சந்தியுங்கள்” என்று விமர்சித்துள்ளது.