தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 42-வது நாளாக தொடரும் போராட்டம்; ஆலையை எதிர்க்க இவ்வளவு காரணங்களா?

First Published Mar 26, 2018, 9:36 AM IST
Highlights
Tuticorin people Struggle to continue on 42nd day against Sterlite plant Are there many reasons to resist the plant?


தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் 42-வது நாளாக போராடி வருகின்றனர். விவசாயிகள், மீனவர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் தீவிரமடைந்து பள்ளி - கல்லூரி மாணவர்களின் புரட்சிப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. 

தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அமைந்துள்ளது. 1994-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996-ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை உற்பத்தியை தொடங்கியது. 

இங்கு வருடத்திற்கு 4 இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், வருடத்திற்கு 12 இலட்சம் டன் கந்தக அமிலமும், 2 இலட்சத்து 20 ஆயிரம் டன் பாஸ்பாரிக் அமிலமும் தயாரிக்கப்படுகிறது. 

இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டபோதே, தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் அருகே மேலும் 4 இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த விரிவாக்கப் பணிக்கு அந்த ஆலையை சுற்றியுள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த 70 மாணவ, மாணவிகளை பெற்றோர் பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப மறுத்து தங்களது போராட்டத்தை தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது. அன்றிரவு சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் எதிரே எம்.ஜி.ஆர். பூங்கா முன்பு மக்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் உள்ளிட்ட மக்களை காவலாளர்கள் கைது செய்தனர். இதில் எட்டு பேரை சிறையில் அடைத்தனர். மறுநாள் முதல் அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தங்கள் ஊரில் உள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனையடுத்து போராட்டம் வலுவடைந்தது. "உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழு" உருவாக்கப்பட்டது. இந்தப் போராட்டக்குழு சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாலையில் மக்கள் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் வரலாறு காணாத வகையில் மக்கள் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர்.  மக்கள் குடும்பத்தோடு பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர். 

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் பாளையங்கோட்டை ரோட்டில் போக்குவரத்து முடங்கியது. இரவில் அங்கு திரண்டிருந்த மக்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்கள் செல்போன்களில் விளக்குகளை ஒளிரவிட்டனர். 

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வயல்களில் வேலை செய்தார்கள்.

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. அ.குமரெட்டியாபுரத்தில் அந்த பகுதி மக்கள் நேற்று 42-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, "தூத்துக்குடி மாவட்டம் விவசாயிகள், மீனவர்களை அதிகம் கொண்ட மாவட்டமாக உள்ளது. இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. 

அதேநேரத்தில் குடிப்பதற்குகூட தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. தினமும் ஒரு கோடியே 5 இலட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. 

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த ஆலைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் வழங்கப்படவில்லை. 

மத்திய, மாநில அரசிடம் அனுமதி பெற்று இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் உள்ளூரில் உள்ள பிரச்சனைகள் மாவட்ட நிர்வாகத்துக்குத்தான் தெரியும். அவர்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் ஆலை அமையும் பகுதியில் நீர்நிலை இல்லை, மக்கள் அடர்த்தி குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்கள். ஆனால், ஆலை அமையும் பகுதியில் நீர்நிலை உள்ளது. 

அதே போன்று அருகில் தூத்துக்குடி மாநகராட்சி அமைந்து உள்ளது. இந்த தொழிற்சாலையில் 90 சதவீதம் வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதிக அளவில் கந்தக-டை-ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. 

கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியான நச்சுவாயு காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, அப்போதைய மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை நீரி அமைப்பு உருவாக்கியது. அந்த அமைப்பு ஆர்சனிக், புளோரைடு போன்றவை வெளியிடப்படுவதாக தெரிவித்து உள்ளது. இந்த ஆர்சனிக் காரணமாக புற்றுநோயும், புளோரைடு காரணமாக கால்கள் வளைந்தும் மக்கள் காணப்படுகின்றனர். 

இந்த நிலையில் கிரீன் பீஸ் அமைப்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து பல்வேறு தகவல்களை திரட்டி உள்ளது. இதில் அதிக காற்று மாசு உள்ள நகரமாக தூத்துக்குடி உருவெடுத்து உள்ளது. தூத்துக்குடியில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே, தூத்துக்குடியில் ஒட்டுமொத்த மருத்துவ ரீதியான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளிக்கொண்டு வர வேண்டும். கண்காணிப்பு கமிட்டி, மாசு விவரங்களை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். 

மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை மீனவர்கள், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்களை திரட்டி மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த உள்ளோம். அதைத்தொடர்ந்து மாநில அளவுக்கு போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு விவசாயிகள், மீனவர்கள் திரள உள்ள நிலையில், கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

click me!