ஆறு ஆண்டுகளாக வேலை கிடைக்காததால் மாற்றுத்திறனாளி பெண் விரக்தியில் தீக்குளிக்க முயற்சி... 

First Published Jun 5, 2018, 6:19 AM IST
Highlights
Trying to burn herself woman in frustration because of did not get a job for six years ...


கடலூர்

ஆறு ஆண்டுகளாக மனு கொடுத்தும் அரசு வேலை கிடைக்காததால் மனமுடைந்த மாற்றுத் திறனாளி பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் ஆட்சியரகம் பரபரப்புடன் காணப்பட்டது. 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் தண்டபாணி தலைமை தாங்கினார். 

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த பொதுமக்கள் வேலை, வங்கி கடன், மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் குறைகேட்பு கூட்ட அறையின் தெற்கு பகுதியில் மனு கொடுப்பதற்காக காத்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம் சென்று ஆட்சியர் தண்டபாணி மனுக்களை ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அருகில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார். 

இதனைப் பார்த்து அங்கே நின்றுக் கொண்டிருந்த பொதுமக்கள் ஓடோடிச் சென்று மாற்றுத் திறனாளி பெண்ணின் கையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். உடலில் தீப்பிடிக்காமல் இருப்பதற்காக குடத்தில் தண்ணீர் பிடித்துவந்து அவரது தலையில் ஊற்றினர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பானது.

பின்னர், அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஆட்சியர் விசாரணை நடத்தினார். அதில், அவர், கடலூர் அருகே உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த சேர்மதுரையின் மகள் தேவி (35) என்பதும், அரசு வேலைக் கேட்டு ஆறு ஆண்டுகளாக மனு கொடுத்தும் வேலை கிடைக்காததால் மனமுடைந்து தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து மனுவைப் பெற்று கொண்ட ஆட்சியர் விரைவில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதன்பின்னர், தேவி செய்தியாளர்களிடம், "நான் பிளஸ்–2 வரை படித்திருக்கிறேன். எனக்கு மீனாட்சி (10), தஷ்ணி (7) என இரண்டு மகள்கள் உள்ளனர். எனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை கைவிட்டு சென்றுவிட்டார். இதனால் எனது பிள்ளைகளை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறேன். 

குடும்ப வறுமையின் காரணமாக தற்போது அவர்கள் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி உதவியாளர், ரே‌சன் கடை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைகேட்டு நான் கடந்த ஆறு ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். 

ஆனால், இதுவரை எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஆனால் வேலைக்கான தகுதி எனக்கு இருக்கிறது. இருந்தும் வேலை கிடைக்கவில்லை.

வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிக்கு முன்னுரிமை என்கிறார்கள். ஆனால், இங்கே பணத்துக்குத்தான் முன்னுரிமை இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். 

இதனால் மனமுடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக எனது 2 பிள்ளைகளுடன் ஆட்சியர் அலுவலத்துக்கு வந்தேன்" என்று அவர் கூறினார்.

click me!