
நெல்லையில் கந்துவட்டி கொடுமை காரணமாக 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், கடனை திரும்பப் பெற வேண்டி கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தல் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கந்துவட்டி காரணமாக, நெல்லையில் 2 குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சில இடங்களில் கந்து வட்டி கொடுமை காரணமாக சிலர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
கந்துவட்டி கொடுமை காரணமாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்களும் காவல் துறையில் அளிக்கப்பட்டன. கந்துவட்டி அளிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கடனாக வழங்கிய 10 லட்சம் ரூபாயை திரும்ப பெற வேண்டும் என்று கோரி, மகனுடன் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரின் மகன் ரித்தீஸ்வரன். குமார், தனது மகனுடன் கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தார்.
குமார், திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, பாதுகாப்பில் இருந்த போலீசார், அவரை தடுத்தனர். பின்னர் குமாரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். நகைக் கடை உரிமையாளரான மோகன்ராஜ் என்பவருக்கு தான் ரூ.10 லட்சம் கடனாக கொடுத்ததாக கூறினார்.
இந்த பணத்தை, மோகன்ராஜ் திருப்பி தராததால், இது குறித்து போலிசில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனை அடுத்து, தான் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குமார் தெரிவித்தார்.
கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லையில், தீக்குளித்த 4 பேர் உயிரிழந்த நிலையில், கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டி கோவையில் தீக்குளிப்புக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.