
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை மனு நீதி நாளில் புகார் அளிக்க வந்த சுப்புலட்சுமி, அவரது கணவர், இரு குழந்தைகள் அனைவரும் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். கந்து வட்டிக் கொடுமையால் தங்களால் வாழ இயலவில்லை என்று கூறி அவர்கள் தீவைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கந்து வட்டி தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை கிடையாது என்று போலீஸாரும் மாவட்ட நிர்வாகமும் கூற, இது கந்து வட்டியால்தான் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்களில் புகார் கூறினார் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்பவரின் சகோதரர்.
சம்பவம் குறித்து பரவலாகக் கூறப்படுவதாவது..
நெல்லை மாவட்டம் காசி தர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து ரூ. 1,45,000 கடன் வாங்கியிருக்கிறார். இதற்கு தினமும் வட்டியாக ரூ.1300 செலுத்தியிருக்கிறார். இப்படியாக 6 மாதத்திற்கு ரூ. 2,34,000 பணம் கொடுத்திருக்கிறார். இவ்வளவு வட்டி கட்ட ஒரு கூலித் தொழிலாளியால் முடியுமா? மேலும் சுமை தாங்க முடியாமல் மிரட்டலுக்கு அஞ்சி காவல் துறையிடம் சென்றிருக்கிறார். ஒரு முறை அல்ல இரு முறை அல்ல... 5 முறை இப்படி சென்றும் கூட, காவல் துறை இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இது குறித்து
மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் இரு முறை மனு செய்திருக்கிறார். எந்த நடவடிக்கையும் இல்லை.
ஏற்கெனவே கடந்த 2003ல் கந்து வட்டி தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டம் ஏன் இவர்களைப் பாதுகாக்கவில்லை?
பொதுவாகவே திங்கட்கிழமை மனு நீதி நாளில் மனு செய்ய ஏராளமானவர்கள் வருவார்கள். இசக்கிமுத்து போல வருபவர்களை அடையாளம் கண்டு காவல்துறையிடம் எச்சரிக்கை செய்து காப்பற்றுவர்கள் அங்கிருக்கும் தகவல் அறிந்த ஊடகத்தினர் உள்ளிட்டவர்கள். ஆனால், திடீரென நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் யாராலும் உடனடியாக உதவ முடியாமல் போயுள்ளது.
இவ்வாறு தகவல் கூறப்பட்டாலும், இந்த விவகாரத்தில் விசாரித்த காவல்துறையினரின் விசாரணையில் சுற்றிலும் இருந்தவர்கள் வேறு விதமாகக் கூறியுள்ளனர்.
தீக்குளித்தவர்கள் வசித்து வந்த அச்சன்புதூரை அடுத்த காசிதர்மம் கிராமத்தில் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பு அதிகாரி, செங்கோட்டை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நேற்று மாலை உடனே விசாரணை மேற்கொண்டனர்.
இறந்து போன சுப்புலட்சுமி, யாரிடம் எல்லாம் கடன் பெற்றார். கந்துவட்டிக்கு கடன் பெறப்பட்டதா என்றெல்லாம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுமார் 25க்கும் மேற்பட்ட பெண்களிடம் சுய உதவிக் குழுக்கள் மூலம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை, சுப்புலட்சுமி கடனாகப் பணம் பெற்றுள்ளது தெரியவந்தது. மேலும் அக்கம்பக்கத்தினரின் தங்க நகைகளைப் பெற்று, அவற்றை கடையநல்லூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார்.
கணவனுக்கு தெரியாமல் பெண் செய்த செயலால் பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகிவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் அந்தப் பகுதியினர்.