
பெரம்பலூர்
குடிநீர் வழங்க கோரி மக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகர், மணியாங்குறிச்சி சாலை, எல்லையம்மன் நகர், அம்பாள் நகர் போன்ற பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதிகளுக்கு மணியாங்குறிச்சி சாலையில் இருக்கும் கொண்டக்காரன் ஓடையில் உள்ள கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது இங்கு ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் கிணற்றில் நீர் குறைவாக உள்ளது. இதனால், அந்தப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எம்.ஜி.ஆர். நகர், மணியாங்குறிச்சி சாலை, எல்லையம்மன் நகர், அம்பாள் நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் சினம் கொண்ட மக்கள் குடிநீர் வழங்கக் கோரி பாடாலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்த தாசில்தார் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், மணிவாசகம் ஆகியோர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மக்கள், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. தற்போது மிகவும் வறட்சியாக உள்ள சூழ்நிலையில் குடிநீருக்கு உகந்த ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கேட்டனர்.
இதனையடுத்து அதிகாரிகள், சரிவர குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடு்க்கிறோம் என்று உறுதி அளித்ததன் பேரில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.