
சென்னை, குறளகம் அருகே வங்கி கட்டடத்தில் ஏறி டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். சென்னை பாரிமுனையில் தனது அலுவலகத்தின் 4-வது தளத்தில் நின்று கொண்டு டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரும் ராஜினாமா செய்யவும் கோரிக்கை விடுத்தார். அவர்கள் ராஜினாமா செய்தால் மட்டுமே கீழே இறங்குவேன் என்றும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறினார். அது மட்டுமல்லாது அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றார்.
கதிராமங்கலத்தில் 10 பேர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்; ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நடப்பு கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றவும் டிராபிக் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார். டிராபிக் ராமசாமியை பத்திரமாக மீட்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.