
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என ராமமூர்த்தி என்பவர் நீதிம்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட இடத்தில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் மத மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டு தமிழக அரசு நீதிபதியின் உத்தரவை செயல்படுத்த மறுப்பு தெரிவித்துவிட்டது.
மதுரை கிளை நீதிமன்றத்தில் இரு முறை முறையிட்ட நிலையில், இரண்டு முறையும் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் இரு முறையும் தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, இந்துத்துவா அமைப்புகள் திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரபபான சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு தடை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இது தொடர்பாக வணிகர்களிடம் தனித்தனியாக எடுத்துறைக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்த வணிகர்கள் வழக்கம் போல் கடைகளை திறந்து வழக்கம் போல தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மலை மீது தீபம் ஏற்ற முயன்ற இந்து அமைப்புகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்த போது அப்பகுதி மக்கள் கை தட்டி வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.