
தருமபுரி
ஒகேனக்கல்லில் விடுமுறையை களிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் எண்ணெய் மசாஜ், பரிசல் பயணம், மீன் விற்பனை என்று அமோகமாக விற்பனை நடைப்பெற்றன.
தமிழகத்தின் முக்கியச் சுற்றுலா தலங்களில் ஒன்று ஒகேனக்கல். கோடை விடுமுறை, தொடர் விடுமுறை மற்றும் சீசன் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் தொடர் விடுமுறையா ஒகேனக்கல்லில் கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக வந்திருந்தனர்.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால் எண்ணெய் மசாஜ் செய்யும் இடங்களில் கூட்டம் களைக் கட்டியது. எண்ணெய் மசாஜ் செய்து கொண்டவர்கள் பிரதான அருவியில் குளித்து களிகூர்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகளில் ஏராளமானோர் பரிசல்களில் சென்று ஒகேனக்கல்லின் இயற்கை எழிலைக் காண ஆர்வம் காட்டினர். இதனால் பரிசல் துறைகளில் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. பரிசல் சவாரியும் விறுவிறுப்பாக நடந்தது.
ஒகேனக்கல்லில் உள்ள அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, மீன்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களையும் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். மேலும் நேற்று மீன் விற்பனை அமோகமாக நடந்தது.