ஒரே நாள் இரவில் மூன்று இரயில்வே ஊழியர்களின் வீடுகளில் திருட்டு; ரூ.2 இலட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை…

First Published Aug 15, 2017, 8:28 AM IST
Highlights
Theft in three railway workers houses at night Rs.2 lakh worth jewelry and money theft


கடலூர்

விருத்தாசலத்தில் ஒரே நாள் இரவில் மூன்று இரயில்வே ஊழியர்களின் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி, நகை, பணத்தை போன்ற ரூ.2 மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் இரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் மெனாய் சீர்மீனா (42). இவர் விருத்தாசலம் இரயில் நிலையத்தில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார்.

மெனாய் சீர்மீனா கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு மெனாய் சீர்மீனா அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் பதறிப் போன மெனாய் சீர்மீனா உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதனிடையே மெனாய் சீர்மீனாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இரயில்வே ஊழியரான பிரபாகரன் (40) என்பவர் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, செல்போன், ரூ.15 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசுகள், 1 கிராம் தங்க காசு ஆகியவை கொள்ளை போயிருந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீடுகளை பார்வையிட்டனர். அப்போது அதே குடியிருப்பில் வசித்து வரும் இரயில்வே ஊழியர் கோவிந்தன் (58) என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த ஒரு சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் நடத்திய விசாரணையில், மெனாய் சீர்மீனா, பிரபாகரன், கோவிந்தன் ஆகிய மூவரும் தங்களது வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் மூன்று பேரின் வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், செல்போன்கள், நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 இலட்சம் இருக்குமாம்.

இதுகுறித்து இரயில்வே ஊழியர்கள் மெனாய் சீர்மீனா, பிரபாகரன், கோவிந்தன் ஆகியோர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து நகை, பணம், தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

click me!