மழை வெள்ள நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் (டிசம்பர் 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கிறது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தாமிரபரணி ஆற்றின் நீர்மட்டம் குறைய ஆரம்பித்துள்ளது.
இச்சூழலில், நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் (டிசம்பர் 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள், அபாரதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்த ஜனவரி 2ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.