உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்றும் கட்டணமில்லா பயணம் - வாகன ஓட்டிகள் ஹேப்பி

By Dinesh TGFirst Published Oct 2, 2022, 2:37 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளாக வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்று கொண்டு இருக்கின்றன.
 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. நாடு முழுவதும் தற்போது பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உளுந்தூர் பேட்டை சுங்ககச்சாவடியிலும் பாஸ்டேக் நடைமுறைக்கு வந்த நிலையில், அங்கு பணியாற்றும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையில் சுங்கச்சாவடி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ரூ.945 கோடி வரி வசூல்; கடந்த ஆண்டை விட 345 கோடி கூடுதல் வசூல்

ஆட்குறைப்பின் முதல் கட்டமாக சுமார் 28 நபர்களை பணி நீக்கம் செய்து பணியாளர்களுக்கு தனித்தனியாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. கடிதம் அளிக்கப்பட்ட நபர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் பணிக்கு வரவேண்டாம் என சுங்கச்சாவடி சார்பில் கூறப்பட்டதாகக் தெரிகிறது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்மேளனத்தின் ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் கார்ல் மார்க்ஸ் தலைமையில் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலவச பயணத்தை அனைத்து பெண்களும் புறக்கணிக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை

ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜை பண்டிகை காலம் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகப்படியான வாகனங்கள் பயணித்து வருகின்றன. இந்த நேரத்தில் ஊழியர்களின் போராட்டத்தால் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

click me!