
புதுக்கோட்டை
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கழிப்பறைகள் கட்டும் பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா வலியுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கழிப்பறைகள் கட்டுமான பணிகள் முன்னேற்றம் குறித்த மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியது:
"புதுக்கோட்டை மாவட்டத்தில் 43 அரசு பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக ரூ.44 இலட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன்கருதி ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்களும் இணைந்து இந்த பணியினை குறித்த காலத்திற்குள் முடிக்குமாறு கேட்டு கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து 43 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமும் இதுவரை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த மீளாய்வுக் கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அதிகாரி ரவிச்சந்திரன், 43 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், கட்டிட பொறியாளர்கள் பலர் பங்கேற்றனர்.