
சிவங்ககை
சிவகங்கையில் உள்ள வீடு, வணிக வளாகம், தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி உயர்வைக் கண்டித்து இன்று (ஜனவரி 23) முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு அனைத்துக் கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கையில் அதிமுக (அம்மா) அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட விவசாய அணி இணைச் செயலரும், சிவகங்கை நகராட்சியின் முன்னாள் தலைவருமான எம்.அர்ச்சுனன் தலைமை தாங்கினார்.
சிவகங்கை கிளையின் நகரச் செயலர் எம்.அன்புமணி முன்னிலை வகித்தார். இதில், "சிவகங்கை நகராட்சி நிர்வாகம் அரசாணை இல்லாமல் வீடு, சொத்து, வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வரி உயர்த்தியதைக் கண்டித்து ஜனவரி 23-ல் அனைத்துக் கட்சி சார்பில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது,
அரசுப் பேருந்துகளில் உயர்த்தப்பட்டுள்ள இரண்டு மடங்கு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மேப்பல் ராஜேந்திரன், எல்.தேவதாஸ், கார்த்திகைச் சாமி, ஷேக் தாவூத், பழனி, மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன்படி, இன்று சிவகங்கையில் நடைப்பெற்று வரும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து கட்சி சார்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வரி உயர்வுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.