ஏவுகணை நாயகனின் பிறந்தநாள் இன்று!

First Published Oct 16, 2016, 1:41 AM IST
Highlights


மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 85-ஆவது பிறந்த நாள் இன்று. இளைஞர்கள் மனதில் எழுச்சியை உருவாக்கிய அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் எனப்படும் அவுல் பக்கீர் ஜெயினுலாவுதீன் அப்துல் கலாம் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

5-ம் வகுப்பு வரை ராமேஸ்வரத்திலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை ராமநாதபுரத்திலும் படித்தார். பின்னர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டமும், சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி எனப்படும் மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் வான் பொறியியல் பட்டமும் பெற்றார்.

அதன்பிறகு 1963-ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் பணிக்கு சேர்ந்தார். 20 ஆண்டுகளாக கேரளாவில் உள்ள தும்பா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அவர் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து, ஒடிஷா மாநிலம் சண்டிபூரில் உள்ள ராக்கெட் ஏவுகணைத் தளத்திலும் 20 ஆண்டுகளாக அவர் பணியாற்றினார்.

பிறகு அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்திய பெருமையும் அப்துல் கலாமுக்கு உண்டு. 1982-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-ஆம் ஆண்டு பொக்ரைனில் இந்தியா நடத்திய பொக்ரைன் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக செயல்பட்டவரும் அப்துல் கலாம் தான்.

1999-நவம்பர் முதல் 2001 நவம்பர் வரை அவர் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றினார். இதேபோல் அறிவியல் ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார். அப்துல் கலாமின் சேவைகளைப் பாராட்டி, மத்திய அரசு கடந்த 1981-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதனைத் தொடர்ந்து நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த 1997-ஆம் ஆண்டு கலாமிற்கு வழங்கப்பட்டது.

இதுதவிர, 30 பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. 10-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விருதுகளையும் கலாம் பெற்றார். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல இந்தியாவின் முதல்குடிமகன் அதாவது குடியரசுத் தலைவர் என்கிற பெருமை அப்துல் கலாமிற்கு கிடைத்தது.
 

click me!