
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட ஆறு வாகனங்களின் கண்ணாடிகளை கல்வீசி உடைத்து மர்ம நபர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி தெருவைச் சேர்ந்தவர்கள் ரியாஸ் அகமது, அஜ்மல்கான், முகமது புகாரி, பஷீர் அகமது. இவர்கள் அனைவரும் அருகருகே வசித்து வருகின்றனர். கீழத்தெருவை சேர்ந்தவர் ஷபாத் அகமது, ஹாஜா நகரை சேர்ந்தவர் அப்துல் சமது.
இவர்கள் ஆறு பேரும் தங்களுக்குச் சொந்தமான ஆம்னி வேன், கார், ஆட்டோ ஆகிய வாகனங்களை வழக்கம்போல் அவரவர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் இந்த வாகனங்களை கல்லால் உடைத்து சேதப்படுத்தி விட்டு ஓடி விட்டனர்.
இதில் ஆறு வாகனங்களின் முன்பகுதியும், பின்பக்க கண்ணாடியும் உடைந்தன.
இதுகுறித்து வாகன உரிமையாளர்கள் ஆறு பேரும் வெள்ளிக்கிழமை தனித்தனியே அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
கார், ஆட்டோ கண்ணாடிகளை வேண்டுமென்றே உடைத்தனரா? அல்லது குடிபோதையில் யாரேனும் அவ்வாறு செய்தனரா என்று விசாரித்து வருகின்றனர்.