
புதுச்சேரியில் இருக்கும் ஒட்டு மொத்த ரவுடிகளை ஒழிக்க குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், புதுவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பேரவையில் நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடாத நிலையில் நாராயணசாமி முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றதிலிருந்து அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது; புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.இதுவரை நடந்த கொலைகள் அனைத்தும் திட்டமிட்டவை இல்லை. குடும்பத்துக்குள் நேரிட்டது.இந்த பிரச்சனைகள் அனைத்தும் ரவுடிகளுக்குள் ஏற்பட்டது.
எனவே தற்போது, ரவுடிகளை ஒழிக்க குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரவுடிகளை புதுவையில் இருந்து வெளியேற்றவும், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். சட்டம் ஒழுங்கை யார் சீர்குலைத்தாலும் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.