TNPSC exam : ஜன.9 நடைபெற இருந்த TNPSC தேர்வு ஒத்திவைப்பு... காரணம் இதுதான்... புதிய தேதி அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jan 7, 2022, 5:03 PM IST
Highlights

வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11 ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. 

வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11 ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில்  நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. கடந்த இரு தினங்களில் யாரும் எதிர்பாராத உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு அதைவிட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  

அதன் ஒரு பகுதியாக வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து வேறு எந்த தொழிலும் நடைபெறக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது. முன்னதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வாணையத்தினால் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை, திட்ட உதவியாளர், ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கு 8 ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை மற்றும் பிற்பகலில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பின் காரணமாக இந்த தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது. இதுகுறித்து நேற்று விளக்கமளித்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று அறிவித்தது. ஆனால், தற்போது தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11 ஆம் தேதி நடைபெறும். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வை எழுதலாம். நாளை நடைபெறவுள்ள கட்டடக்கலை, திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!