போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ள நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9ஆம் தேதி (நாளை) தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஐடியு செளந்தரராஜன் கூறுகையில், “நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது. தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11:59 மணி வரை மட்டுமே இயக்கப்படும். நீண்டதூரம் செல்லும் பேருந்துகள் நாளை காலை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் நிறுத்தி வைக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், மாநிலம் முழுவதும் போக்குவரத்து முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தொமுச உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களை கொண்டு வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!
முன்னதாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. ஏற்கனவே இரண்டு, மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதனிடையே, திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளதால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் போக்குவரத்து துறை உயரதிகாரிகள், காவல்துறையினர் பங்கேற்றுள்ளனர்.