மாநில கல்விக்கொள்கையை உருவாக்க குழு.. ஒராண்டுக்குள் இறுதி அறிக்கை அளிக்க உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Jun 2, 2022, 3:06 PM IST
Highlights

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மாநில அளவில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
 

ஓராண்டில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் குழு அறிக்கை அளிக்கும். தேவைபட்டால் துணைக்குழுவை உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் புதிதாக கல்விக் கொள்கையை இக்குழு உருவாக்குகிறது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையை வடிவமைக்கும் உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு கல்விக் கொள்கையை வடிவமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலகளாவிய கல்வி, இளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பம் உள்ளிடவற்றை கருத்தில்கொண்டு வடிவமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவின் தலைவராக நீதியரசர் முருகேசன், உறுப்பினர்களாக பேராசிரியர்கள் ஜவஹர்நேசன், இராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், இராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் இராமகிருஷ்ணன், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாசன், கல்வியியல் எழுத்தாளர் முனைவர் ச.மாடசாமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, அகரம் அறக்கட்டளை தலைவர் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவரும் வகையிலும், பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக்கொள்கை அமைய வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் சமத்துவமான கல்வியை  தரும் வகையில் கல்விக்கொள்கையை வடிவமைக்கவும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்.. "தாராளமா மார்க் போடுங்க".. ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!

click me!