
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த உயர்நிலை தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது. முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது.
ரஷ்யாவுடன் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் மீட்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய தூதர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும், இந்த சிறப்பு குழுவில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மீட்பு பணியில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வர் என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் மேற்கு பகுதியில் அதிகமான மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷ்ய எல்லை வழியாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுவரை உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த 193 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.