புத்துயிர் பெறும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் : தமிழக அரசு புதிய ஒப்பந்தம்!!

First Published Jun 19, 2017, 10:13 AM IST
Highlights
TN govt contract for athikadavu


அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு சுற்றுச் சூழல் தாக்கம் குறித்துஆய்வு மேற்கொள்ள  பவர் அன்ட் கன்சல்டன்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து இன்று சட்டப் பேரவையில் இன்று அறிவிப்பு வெளியாகிறது. 

அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை  கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும்  ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க  காரமடை, மேட்டுப்பாளையம்,  அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை,  காங்கேயம்,  ஊத்துக்குளி,  நம்பியூர்  மற்றும் புளியம்பட்டி பகுதிகளில் உள்ள 31 ஏரிகள், 40  ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர் நிலைகளில் நிரப்புவதன் மூலம், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாகும். 

இத்திட்டம் நிறைவேறும் போது இப்பகுதிகளில் வாழும் 35 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படும். மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம்  ஏக்கர் வேளாண் நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

முதன் முதலில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி முன்னாள் எம்எல்ஏ  மாரப்ப கவுண்டர் தமிழக அரசிடம் 1957ஆம் ஆண்டில் கோரிக்கை வைத்தார். 

அறுபது ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி கோவை மாவட்ட மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு சுற்றுச் சூழல் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ள  பவர் அன்ட் கன்சல்டன்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்திட்டத்திற்கு சுற்றுச் சூழல் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்வது குறித்த தகவல்  சட்டப் பேரவையில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

60 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டம் புத்துயிர் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

click me!