
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாநிலத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,93,04,905 பெண் வாக்காளர்கள், 2,80,30,658 ஆண் வாக்காளர்கள் மற்றும் 7,728 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். மேலும், 14,59,039 முதல் முறை வாக்காளர்களும், 68,501 ராணுவ வாக்காளர்களும் உள்ளனர். ஏற்கனவே 4,18,541 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் விறுவிறுப்புடன் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் மாலை 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 4 கோடி பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புறம், கிராமப்புறம் என எல்லா இடங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் 76.43% வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. கரூர் (76.08%), சேலம் (75.79%), ஈரோடு (75.61%), திருப்பூர் (75.38%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தருமபுரி (74.68%), திண்டுக்கல் (74.35%), காஞ்சிபுரம் (72.51%), கோயம்புத்தூர் (71.16%), கள்ளக்குறிச்சி (71.11%), திருச்சிராப்பள்ளி (71.05%) போன்ற மற்ற மாவட்டங்களிலும் சீரான வாக்குப்பதிவு காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாகவே 73% வாக்குகளே பதிவாகி இருந்தன. ஆனால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 3 மணி நிலவரப்படியே 70% வாக்குகள் பதிவாகி விட்டது. ஆகவே கடந்த தேர்தலை முறியடித்து வாக்குப்பதிவு 80 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்திலும் விறுவிறு வாக்குப்பதிவு
தமிழகத்தை போன்று மேற்குவங்கத்திலும் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி, 78.77% வாக்குகள் பதிவாகி தமிழ்நாட்டை விட முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவு 80 சதவீதத்தை தாண்டியுள்ளது. தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 81.49% வாக்குகள் பதிவாகின. அதைத் தொடர்ந்து, பஸ்சிம் மேப்பூரில் 81.07%, ஜார்கிராமில் 81.04%, பிர்பூமில் 80.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. முர்ஷிதாபாத்தில் 79.72% வாக்குப்பதிவும், டார்ஜிலிங் மற்றும் மால்டாவில் முறையே 76.54% மற்றும் 76.22% வாக்குப்பதிவும் நடந்துள்ளது. இது மாநிலம் முழுவதும் நகர்ப்புறம், கிராமப்புறம் என எல்லா இடங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்ததைக் காட்டுகிறது.
தமிழகம், மேற்கு வங்கத்தில் போட்டியில் யார்? யார்?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் (காங்கிரஸ், தேமுதிக, விசிக) மற்றும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (பாஜக, பாமக) இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது. மேற்கு வங்கத்தில், 294 சட்டமன்றத் தொகுதிகளுக்காக கட்சிகள் போட்டியிடுகின்றன. தேர்தல் ஆணையத்தின்படி, முதல் கட்டத்தில் 152 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இந்த கட்டத்தில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்கிறார். கடந்த தேர்தலில் 77 இடங்களை வென்ற பாஜக, இம்முறை ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது.