
பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடிக்கென பட்ஜெட்டில் நிதி தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறைக்கு ரூ.13,176 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் இன்று தாக்கல் செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி ஆகியவற்றுக்கு நிதிஒதுக்கீட்டையும் அவர் அறிவித்தார். அவர் பேசியதாவது:
கடன் தள்ளுபடி
வரும் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக பட்ஜெட்டில் ரூ.2,531 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளி்ல் நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன்தள்ளுபடிக்காக ரூ.600 கோடியும் என மொத்தம் ரூ.4,131 கோடி இந்த வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
வட்டியில்லா கடன்
நடப்பு நிதியாண்டில் இதுவரை 14 லட்சத்து 15 ஆயிரத்து 916 விவசாயிகளுக்கு ரூ.9773 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்துக்காக ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுவினியோக திட்டத்தை செயல்படுத்த மானியமாக பட்ஜெட்டில் ரூ.7500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறைக்கு ரூ.13,176 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
தூர்வாருதல்
கால்வாய்கள், ஏரிகள், நீர்வழித்தடங்களையும் சீரமைத்தல், தடுப்பணை, கதவணைகளை சீரமைத்தல் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2,787 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர், சோலையார் , மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 அணைகளை பாதுகாக்கவும், புனரமைக்கவும் உலகவங்கி, ஆசிய வங்கி உதவியுடன் ரூ.1,064 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்படும்
டெல்டா பாசனம்
குறுவை சாகுபடிக்கு கடைமடைவரை காவிரி நீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக டெல்டா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் 4,964 கி.மீ நீளமுள்ள கால்வாய்களை ரூ.84 கோடியில் சீரமைக்க, ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நீர்வளத்துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
வள்ளலார் திட்டம்
வள்ளலாளரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதரவில்லாத, கைவிடப்பட்ட வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்க வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் வரும் நிதியாண்டு முதல் புதிதாக செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைபராமரிப்பு துறைக்கு ரூ.1314.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
இவ்வாறு பழனிவேல்ராஜன் தெரிவித்தார்