
தமிழக பாஜக வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ், 2,538 பணியாளர் நியமனங்களில் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் கைமாறியதன் மூலம் ரூ.888 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறை உங்கள் ஏவல்துறைக்கு அறிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சிகரமானது மட்டுமன்றி, மிகுந்த அவமானகரமானதும் கூட.
அரசு வேலைக் கனவுகளுடன் கஷ்டப்பட்டு படித்து, பட்டம் பெற்று, விண்ணப்பித்திருத்த 1.12 லட்சம் பேரை புறம் தள்ளிவிட்டு, குறுக்கு வழியில் திருட்டுத்தனமாக அரசு வேலைகளை ஆளும் அரசே விற்பனை செய்துள்ளது என்பதை நினைக்கையில் அருவருப்பு மட்டுமே மிஞ்சுகிறது. வெறும் பல லட்சங்களுக்காக நமது இளைஞர்களின் லட்சியங்களில் மண்ணை வாரி தூற்றுவதற்கு உங்களுக்கு எப்படி மனது வந்தது? உங்கள் பிள்ளைக்கு பதவி கிடைத்துவிட்டதால் எங்களது பிள்ளைகளின் வயிற்றில் அடிக்க துணிந்துவிட்டீரா?
கமிஷன் வாங்கிக் கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அரசு வேலைகளை தாரை வார்த்து கொடுப்பதற்காகவா மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தீர்கள்? அந்தளவிற்கு அப்பாவி மக்களின் தேவையை விட அதிகாரிகளின் ஆசை உங்களுக்கு முக்கியமாக போய்விட்டதா?
உங்கள் ஆட்சி முடிவதற்குள் இன்னும் எத்தனை அவமானங்களையும் துரோகங்களையும் தமிழக மக்கள் தாங்க வேண்டுமோ? இதற்கு மேலும் முதல்வர் பதவியில் தொடர்வதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.