
வேலூர்
ரேசன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் மூன்று பேரை ஆட்சியர் ராமன் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவி மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ஆட்சியர் ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார் ஆகியோர் திடீரென ஆய்வு நடத்தியும், முறைகேட்டில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.
அதன்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார் மற்றும் அலுவலர்கள் கடந்த 10-ஆம் தேதி காட்பாடி கோரந்தாங்கல் பகுதியில் உள்ள ரேசன் கடையில் திடீர் ஆய்வு நடத்தினார்.
அங்கு விற்பனையாளராக வேலை செய்த கருணாகரன், ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவி இல்லாமல் ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை போன்றவை வழங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவியை தவறவிட்டதும், அதனை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கி வந்ததும் தெரிந்தது.
அதனைத் தொடர்ந்து அதே நாளில் அதிகாரிகள் நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரப்பள்ளியில் உள்ள ரேசன் கடையில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு விற்பனையாளராக வேலை செய்த அருள், நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக அரிசி வழங்கியதை அதிகாரியகள் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார் மற்றும் அதிகாரிகள் காட்பாடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு பண்டக சாலை 2-வது ரேசன் கடையில் ஆய்வு செய்தனர்.
அங்கு ரூ.31 ஆயிரம் மதிப்பிலான பொருட்களின் இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விற்பனையாளர் ராஜலட்சுமியிடம் விசாரித்தபோது, முறையான தகவல் சாக்கு சொல்லினார் .
அதனைத் தொடர்ந்து அதே நாளில் அதிகாரிகள் பேரணாம்பட்டை அடுத்த ஓலக்காசியில் உள்ள ரேசன் கடையில் ஆய்வு செய்தனர். அங்கு பொருட்கள் இருப்பு இல்லாமல் இருந்தது.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பொருட்கள் இருப்பு இல்லாதது குறித்து விற்பனையாளர் ராஜன்பாபு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காதது தெரியவந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு அதற்குண்டான அறிக்கையை ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பேரில், ரேசன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் கருணாகரன், அருள், ராஜலட்சுமி ஆகிய மூவரையும் ஆட்சியர் ராமன் நேற்று பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டார்.