கடலூரில் கடத்தி வரப்பட்ட யானைத் தந்தங்களை ஹோட்டலில் ரூம் போட்டு விற்க முயன்ற மூவரை காவலாளர்கள் கைது செய்தனர். மஃப்டியில் சென்ற காவலாளர்கள், கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தனர். தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனர்.
கடலூர்
கடலூரில் கடத்தி வரப்பட்ட யானைத் தந்தங்களை ஹோட்டலில் ரூம் போட்டு விற்க முயன்ற மூவரை காவலாளர்கள் கைது செய்தனர். மஃப்டியில் சென்ற காவலாளர்கள், கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தனர். தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம், கடலூர் – சிதம்பரம் பிரதானச் சாலையில் விடுதி ஒன்று உள்ளது. இங்கு தங்கியிருக்கும் சிலர் யானைத் தந்தங்களை விற்பது தொடர்பாக செல்போனில் பேரம் பேசுகின்றனர் என்ற தகவல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிறப்புப் படைக் காவல் உதவி ஆய்வாளர் நடராஜனுக்கு கிடைத்தது.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் காவலாளர்கள் மஃப்டியில் அந்த விடுதிக்குச் சென்றனர். காவல்துறைக்கு வந்த தகவலின்படி, அங்குள்ள அறை ஒன்றில் சிலர் யானைத் தந்தங்களை கடத்திக்கொண்டு வந்ததும், அதனை விற்க பேரம் பேசிக்கொண்டிருந்ததும் உறுதியானது.
அறையில் இருந்தவர்களை காவலளர்கள் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், வன்னியர் பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ், வேலங்கிராயன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், குருவப்பன்பேட்டை கொளஞ்சி என்பது தெரிந்தது.
இவர்கள் தங்கியிருந்த அறையில் இரண்டு யானைத் தந்தங்கள் இருந்தன. அவற்றைக் கைப்பற்றிய காவலாளர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
அதன்பின்னர் அவர்களை புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மூவரையும் ஆய்வாளர் அமுதா கைது செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகளான அனந்தராமன் மற்றும் ராமன் என்போரை காவலாளர்கள் வலைவீசித் தேடி வருகின்றனர். இவர்களைப் பிடித்தால்தான் யானைத் தந்தங்கள் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்ற தகவல் தெரியவரும் என்று காவலாளர்கள் கூறுகின்றனர்.