திருப்பூரில் இரும்பு கம்பியால் தையல் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த மூவர் கைது…

First Published Aug 5, 2017, 9:13 AM IST
Highlights
Three arrested for killing a sewing worker in Tirupur


திருப்பூர்

திருப்பூரில் இரும்பு கம்பியால் தையல் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த மூவரை காவலாளர்கள் கைது செய்தனர். தலைமறைவான மேலும் ஒருவரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியை அடுத்த சுண்டமேடு குப்பாண்டம்பாளையம் பகுதியில் குப்பை மேடு உள்ளது. அந்த குப்பை மேட்டில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு ஒருவர் பழைய பொருட்கள் ஏதாவது கிடைக்குமா? என்று தேடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு வந்து நின்ற ஒரு சரக்கு ஆட்டோவில் இருந்து இறங்கிய சிலர், ஆட்டோவில் ரத்த காயங்களுடன் கிடந்த ஒருவரை இழுத்து வெளியே போட்டுவிட்டு, அதே சரக்கு ஆட்டோவில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்தவர் கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை கைகாட்டி நிறுத்தி, நடந்த விபரத்தை கூறினார். உடனே மோட்டார் சைக்கிளில் வந்தவர், அந்த சரக்கு ஆட்டோவை விரட்டிச் சென்று அதன் பதிவு எண் குறித்து வைத்துக்கொண்டு வீரபாண்டி காவலாளர்களுக்குத் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலாளர்கள் அங்கு காயங்களுடன் கிடந்தவருக்கு உயிர் இருந்ததால் உடனே அவரை ஒரு அவசர ஊர்தியில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைகுப் போகும் வழியிலேயே அவர் இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

இதற்கிடையில் அந்த சரக்கு ஆட்டோவின் பதிவு எண் மூலம் காவலாளர்கள் விசாரித்தபோது அந்த சரக்கு ஆட்டோ திருப்பூர் இராயபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.

இதையடுத்து வீரபாண்டி காவல் ஆய்வாளர் சுப்புரத்தினம் மற்றும் காவலாளர்கள் அங்குச் சென்று அந்த சரக்கு ஆட்டோவின் உரிமையாளர் செல்வம், சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் (20) மற்றும் முருகன் (35) ஆகியோரை வீரபாண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அந்த சரக்கு ஆட்டோவும் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மணிகண்டன் (21) தையல் தொழிலாளி, திருப்பூர் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் மணிகண்டனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சரக்கு ஆட்டோ உரிமையாளர் செல்வம், சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் மற்றும் முருகன் ஆகியோரை வீரபாண்டி காவலாளர்கள் நேற்று கைது செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட செல்வம் கொடுத்த வாக்கு மூலம்:

“கோவை கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதியில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், தனது மோட்டார் சைக்கிளை இராயபுரத்தைச் சேர்ந்த செல்வத்திடம் ரூ.12 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார்.

ஆனால் அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் வேறு சாவியை போட்டு செல்வத்திடம் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு செல்வத்திற்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டனும், இவருடைய தம்பி ஆனந்த் (21) ஆகியோர் சேர்ந்து செல்வத்தின் சரக்கு ஆட்டோ கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வம் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து செல்வத்திற்கும், மணிகண்டனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம், தனது தம்பி ஜோசப், சரக்கு ஆட்டோ டிரைவர் சதீஷ் மற்றும் முருகன் ஆகியோருடன் கணபதிபாளையம் பகுதிக்குச் சென்றனர்.

அங்கு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மணிகண்டனையும், அவருடைய தம்பி ஆனந்த்தையும் தாக்கி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். இதில் ஆனந்த் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டார். இதனால் தனியாக சிக்கிய மணிகண்டனை இரும்பு கம்பியால் தாக்கி குப்பாண்டம்பாளையம் குப்பை மேட்டில் இழுத்துப்போட்டு சென்று இருப்பது தெரியவந்தது” என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான மூவரையும் காவலாளர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள செல்வத்தின் தம்பி ஜோசப்பை காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

click me!