டி.டி.வி. தினகரனை நம்பிப்போனவர்கள் பரிதாப நிலையில் உள்ளனர் - அமைச்சர் மணிகண்டன் கிண்டல்...

First Published Mar 7, 2018, 12:41 PM IST
Highlights
Those who believe in ttv there situation is pathetic - Minister Manikandan


இராமநாதபுரம்

 

டி.டி.வி. தினகரனை நம்பிப்போன 18 எம்.எல்.ஏ.க்கள் பதவியிழந்து பரிதாப நிலையில் உள்ளனர் என்று அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

 

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, ஒன்றிய அவை தலைவர் உடையத்தேவன், முன்னாள் அவை தலைவர் ராதாகிருஷ்ணன், பாக்கியநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், திருஉத்திரகோசமங்கை பழனிமுருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் பங்கேற்று இலவச வேட்டி - சேலை, தையல் இயந்திரம் உள்பட ரூ.5 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

அப்போது அவர் பேசியது: "இராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திருப்புல்லாணி ஒன்றியத்தில் இருந்து 160 வாகனங்களில் வந்து பங்கேற்றார்கள். அந்த நல்ல நாளில்தான் தேர்தல் ஆணையம் நமக்கு கட்சி அங்கீகாரத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் வழங்கியது.

 

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை சிலர் கவிழ்க்க நினைக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் வரை இந்த ஆட்சியை யாரும் தொட்டுப்பார்க்க முடியாது.

 

அவ்வாறு கலைக்க நினைப்பவர்கள் உண்மையான அ.தி.மு.க.வினர் இல்லை. டி.டி.வி. தினகரனை நம்பிப்போன 18 எம்.எல்.ஏ.க்கள் பதவியிழந்து பரிதாப நிலையில் உள்ளனர்.

 

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக பிரிந்தபோது அப்போது துணை பொது செயலாளராக இருந்த டி.டி.வி.தினகரன் தங்க தமிழ்செல்வனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க விரும்பவில்லை. அப்படிப்பட்ட தினகரனோடு தங்க தமிழ்செல்வன் இணைந்து செயல்படுவது தவறானது. பல்வேறு சமுதாயங்கள் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை நடத்தி வருகிறோம்.

 

இலங்கையில் சேதமடைந்த இராமேசுவரம் மீனவர்களின் 18 படகுகளுக்கு ரூ.90 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

 

சில நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்த கமல்ஹாசன் கூட தனிக்கட்சி, தனிக்கொடி ஆகியவற்றை அறிவித்துள்ளார். அதேபோல தினகரன் அணியினரும் தனிக்கட்சி, கொடியை பயன்படுத்த வேண்டும். எங்களது இரட்டைஇலை சின்னத்தை, கொடியை பயன்படுத்தக்கூடாது.

 

மானிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2000 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும்.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் எதிர்க்கட்சி தலைவரை நேரில் அழைத்து ஆலோசித்து நல்ல முடிவை முதலமைச்சர் எடுத்து வருகிறார்.

 

இதுபோன்ற நல்ல பணிகளுக்கு வரவேற்பு அளிக்காவிட்டாலும் தினகரன் அணியினர் கெடுதல் செய்யக் கூடாது. அ.தி.மு.க.வில் தினகரனின் சிலிப்பர் செல் என்று யாரும் கிடையாது. அந்த சிலிப்பர் செல் எல்லாம் இறந்த செல் ஆகிவிட்டது" என்று அவர் பேசினார். c

click me!