
விருதுநகர்
கோடை காலத்திலும் தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படாது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடந்து அழுத்தம் கொடுக்கும்.
மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவை அதிமுக எம்.பி.க்கள் தொடந்து குரல் கொடுத்து வருகின்றனர். எனவே காவேரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் .
சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் சிவகாசி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். அதற்கான பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் எங்கள் கட்சி ஜனநாயக முறைப்படி போட்டியிட்டு வெற்றி பெறும்.
ஆவின் பால் தினசரி இரண்டு கோடி லிட்டர் கிடைக்கிறது. அதனால் கோடை காலத்திலும் தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படாது" என்று அவர் தெரிவித்தார்.