அதிமுக -அமமுக இடையே  மோதல்; வேட்புமனு தாக்கல் காலவரையற்ற நிறுத்தி வைப்பு...

First Published Mar 27, 2018, 8:36 AM IST
Highlights
Confrontation between ADMK and AMMK deposit postponed indemnity


விருதுநகர்

விருதுநகரில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வினர் இடையே ஏற்பட்ட மோதலால் வேட்புமனு தாக்கல் காலரையற்ற நிறுத்தி வைக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் சிவகாசி அருகே உள்ள கோப்பையநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல் நேற்று தொடங்கியது. 

பதினோறு உறுப்பினர்கள் கொண்ட இந்த கூட்டுறவு சங்கத்துக்கு நேற்று காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சங்க அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முருகனிடம் அ.தி.மு.க.வை சேர்ந்த காளிமுத்து மற்றும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

அதன்பின்னர் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

அப்போது அங்கிருந்த அ.தி.மு.க.வினர், எங்கள் தரப்பை சேர்ந்த சிலர் இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டி இருக்கிறது. அதன்பின்னர் அ.ம.மு.க. வை சேர்ந்தவர்களை அனுமதியுங்கள் என்று கூறினர். 

அதற்கு அங்கிருந்த காவல் அதிகாரிகள் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் தலா ஐந்து பேர் வீதம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். நீங்கள் (அ.தி.மு.க.) ஏற்கனவே 10-க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டதால் அவர்களை (அ.ம.மு.க.) வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதியுங்கள் என்றனர். 

இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கூட்டுறவு வங்கியின் கதவை காவலாளர்கள் இழுத்துப் பூட்டினர். அலுவலகத்துக்குள் இருந்த வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். 

வங்கியின் வெளியே பதற்றமான சூழ்நிலை இருந்தது. இதை தொடர்ந்து காவலாளர்களின் பாதுகாப்புடன் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் மற்றும் 4 பேர் வெளியே வந்தனர். அதன்பின்னர் காவலாளர்கள் அ.தி.மு.க.வினரை வேட்புமனு தாக்கல் செய்ய அழைத்தனர். ஒரே நேரத்தில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வை சேர்ந்தவர்களும் வங்கி முன்பு திரண்டதால் மோதல் உருவாகி தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஏராளமான காவலாளர்கள் வங்கியின் முன்பு குவிக்கப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா அங்கிருந்தவர்களை கலைந்துபோக வேண்டும் என்று காவல் வாகனத்தில் இருந்த மைக் மூலம் எச்சரித்தார். ஆனால் யாரும் கலைந்து போகாததால் பரபரப்பு அதிகமானது. 

அ.ம.மு.க. வை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் திணறினர். கூட்டுறவு சங்க அலுவலக கதவை இழுத்து மூடிய காவலாளர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மேல் அதிகாரிகளிடம் நடந்த பிரச்சினை குறித்து தெரிவித்தனர். அதன் பின்னர் வேட்புமனு தாக்கல் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அ.ம.மு.க. வினர் மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் திருத்தங்கல் சரவணகுமார், பிச்சைக்கனி, கந்தசாமி, அமல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சம்பவ இடத்துக்கு வந்தார்.  வங்கியின் உள்ளே யாரையும் காவலாளர்கள் அனுமதிக்காததால் கூட்டுறவு சங்க உயர் அதிகாரியிடம் செல்போன் மூலம் புகார் தெரிவித்தார். 

இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் ஒத்தி வைப்பதாக அதிகாரி முருகன் ஒரு கடிதத்தை வங்கியின் நுழைவு வாயில் பகுதியில் ஒட்டினார். 

அந்த கடிதத்தில், "கோப்பையநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்புமனு தாக்கலின் போது பதற்றமான சூழ்நிலை நிலவுவதாலும், மேலும் காவல்துறை துணைகண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரிலும் தற்போது காலவரையற்ற முன்தேதி குறிப்பிடாமல் வேட்புமனு தாக்கல் நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனால் அனைவரும் அங்கிருந்து கலைந்த சென்றனர். எனினும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  
 

click me!