
பிள்ளை பிடிக்க வாராங்கப்பா ? சாமி கும்பிட வந்தவர்களை விரட்டி, விரட்டி அடித்த கிராம மக்கள்…. மூதாட்டியை அடித்தே கொலை செய்த கொடூரம்…..
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்ததால், கடத்தல் கும்பல் என நினைத்து கிராமமக்கள் தாக்கியதில் சென்னையை சேர்ந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வடமாநில ஆசாமிகள் புகுந்து குழந்தைகளை கடத்திச்செல்வதாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வரும் அடையாளம் தெரியாதவர்களையும் சந்தேக நபர்களையும் சரமாரியாக தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 30 வயது இளைஞர் ஒருவரையும், திருநங்கை ஒருவரையும் பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என நினைத்து பொது மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இந்நிலையில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் ருக்மணி என்பவர், மலேசியாவில் வேலை செய்து வரும் தனது அக்காள் மகன் மோகன்குமார் மற்றும் உறவினர் சந்திரசேகரன் , நண்பர்கள் வெங்கடேசன், கஜேந்திரன் ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தண்ணீர்குளம் என்ற இடத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு செல்ல நேற்று காலை காரில் புறப்பட்டுள்ளனர்.
மதியம் 12 மணியளவில் போளூர் அடுத்த ஜம்னாமரத்தூர் அருகே உள்ள தம்புகொட்டான்பாறை கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர். குலதெய்வ கோயிலுக்கு வழி தெரியாததால் அங்கு காரை நிறுத்தி அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சில குழந்தைகள் அருகில் விளையாடிக்கொண்டிருந்தனர். குழந்தைகளை பார்த்ததும் காரிலிருந்து இறங்கிய ருக்மணி, அவர்களுக்கு வெளிநாட்டு சாக்லெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த பெண்கள், `குழந்தை கடத்தல்காரர்கள்’ என கூச்சல்போட்டதோடு, மூதாட்டி ருக்மணியை தாக்கியுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத மூதாட்டி மற்றும் காரில் வந்தவர்கள் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து காரில் ஏறி தப்பி சென்றனர்.
உடனே, பக்கத்தில் உள்ள களியம் கிராமத்தினருக்கு கார் எண்ணை கூறி குழந்தை கடத்தல் கும்பல் வருகிறார்கள் என்று தம்புகொட்டான்பாறை கிராமத்தினர் செல்போனில் தகவல் அளித்தனர்.
சிறிது நேரத்தில் களியம் பஸ் நிலையம் அருகே அந்த கார் வந்தது. அப்போது, காரை கிராம மக்கள் வழிமறித்தனர். பின்னர், காரில் இருந்த 5 பேரையும் கீழே இழுத்து போட்டு உருட்டுகட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினர்.
அடிஉதை தாங்காமல் அலறிய அவர்கள் ``நாங்கள் சென்னையில் இருந்து குலதெய்வ வழிபாடுக்கு கோயிலுக்கு வந்தோம். நாங்க...குழந்தையை கடத்த வரலை’’ என்று கதறினர். ஆனாலும், அவர்கள் சொல்வதை கேட்காமல் கிராம மக்கள் கொடூரமாக தாக்கியதில் 5 பேருக்கும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
உயிருக்கு போராடிய நிலையில் எங்களை விட்டுவிடுங்கள் என்று அவர்கள் மன்றாடியபோதும் கோர தாக்குதலை கிராம மக்கள் நிறுத்தவில்லை. ஒருகட்டத்தில், ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் 5 பேரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் மயங்கி சாய்ந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 5 பேரையும் மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டுமிராண்டித்தனமான இந்த செயல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,