
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.
சில மாவட்டங்களில் 100 டிகரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அனல் காற்றுடன் கூடிய வெப்பம் நிலவி வருகிறது.
பருவமழை பொய்த்துப் போனதால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் வீராணம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள், வறண்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக இருக்கும் மேட்டூர் , பவானிசாகர், கல்லணை உள்ளிட்ட பல அணைகளின் நீர் இருப்பு அதள பாதாளத்திற்குச் சென்றுள்ளது.
இந்தச் சூழலில் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரப்படி குன்னூர், பாலக்காட்டில் 7 செ.மீ., காஞ்சிபுரம், கரூரில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.