தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவோ, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவோ கொஞ்சம் கூட வாய்ப்பில்லை.
தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவோ, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவோ கொஞ்சம் கூட வாய்ப்பில்லை என்று கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் தே.மு.தி.க மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டையில் தே.மு.தி.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் வரவேற்றுப் பேசினார். மாவட்டப் பொருளாளர் இராமலிங்கம், பொறுப்பாளர் வழக்குரைஞர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தே.மு.தி.க மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியது: "கடவுளையும், மக்களையும் மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் இறங்கும் ஒரேத் தலைவர் விஜயகாந்த் தான்.
தொண்டர்கள் இப்போதிருந்தே களப்பணி ஆற்ற வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வென்று விஜயகாந்த் முதலமைச்சர் ஆவார். விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
ஜெயலலிதா இல்லாததால் நல்ல தலைமை இல்லாமல் அ.தி.மு.க திண்டாடுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய தலைவர்கள் இல்லாததால் தி.மு.க., அ.தி.மு.க. மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது.
இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றாக உருவான தே.மு.தி.க.-வை தான் மக்கள் விரும்புகின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவோ, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவோ கொஞ்சம் கூட வாய்ப்பில்லை.
விஜயகாந்த் நல்லாட்சியைத் தருவார் என்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவார் என்றும் அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் சதீஷ், கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் பரந்தாமன், சந்திரன், அன்பரசன் போன்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். கெலமங்கலம் பேரூர் செயலாளர் முருகேசன் நன்றித் தெரிவித்து கூட்டத்தை முடித்து வைத்தார்.